நியூசிலாந்து நாட்டில் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்த காரில் உயிருக்கு போராடிய இளம்பெண் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் தங்கள் சமயோசித திறமையினால் காப்பாற்றியுள்ளனர். இரண்டு போலீஸ்காரர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து என்ற பகுதியில் கடற்கரைக்கு அருகில் உள்ள வெயிட்டிமாட்டா என்ற துறைமுகத்திற்கு இளம்பெண் ஒருவர் காரில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது. சிறிது நேரத்தில் கார் கடலில் மூழ்கத்தொடங்கியது. அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கார் அருகில் சென்று பார்த்தபோது காரினுள் இருந்த இளம்பெண் உயிருக்கு போராடியவாறு இருந்தார். காரின் கதவை திறக்க முயன்ற போலீஸ்காரர்கள் கதவை திறக்க முடியாததால் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்து இளம்பெண்ணை உயிருடன் காப்பாற்றினர்.
பால் வாட்ஸ் மற்றும் சைமன் ருஷல் ஆகிய இரண்டு போலீஸ்காரர்களுக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இருவரும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் காருடன் இளம்பெண்ணும் மூழ்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.