துபாயில் பணிபுரியும் இந்திய வாலிபர் ஒருவரை ஜோர்டான் நாட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அவருடைய பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் ஜோர்டான் நாட்டு இளம்பெண் ஒருவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடந்த வழக்கு ஒன்றில் இந்திய வாலிபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில், ‘”கடந்த டிசம்பர் 17ஆம் தேதி புர் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிப்ட்டினுள் ஏறி, நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தினேன்.
அப்போது உள்ளே இருந்த அந்த பெண், என்னைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டாள். என்னை நெருங்கி வந்து என்னை கட்டிப்பிடித்தாள். அதற்குள் நான்காவது மாடியை லிப்ட் அடைந்து விட்டது. நான் வெளியே சென்றபோது எனது சட்டையை பிடித்து உள்ளே இழுத்துப் போட்டாள். ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தினாள்.
என்னை பலவந்தமாக கட்டியணைத்த போது லிப்ட் 7வது மாடியை அடைந்து விட்டது. மீண்டும் நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தி விட்டாள். நான்காவது மாடியில் லிப்ட் நின்றபோது நான் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பி ஓட்டம் பிடித்தேன். வெளியே வந்து பார்த்தபோது எனது பின் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்தேன். அதில் வைத்திருந்த 4500 திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய்) மாயமாகி விட்டிருந்தது. இது தொடர்பாக நான் காவல்துறையில் புகார் அளித்தேன். அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்’ இவ்வாறு இந்திய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஜோர்டான் நாட்டு இளம்பெண் மறுத்துள்ளார். இந்திய வாலிபர் கூறுவதுபோல் தான் எந்த தகாத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், தான் கடவுளுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண் என்றும் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்தார்.
ஆனால் சிசிடிவி கேமராவில் வாலிபரை அந்த பெண் லிப்பிடின் உள்ளே இழுத்து உள்ளே போடுவது பதிவாகியுள்ளதால் அந்த பெண்ணின் குற்றம் நிரூபிக்கப்படும் என துபாய் போலீஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.