ஜோர்டான் நாட்டை சேர்ந்த டாக்டர் ஒருவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்தபோது, மறதியாக தனது செல்போனை குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் வைத்துவிட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த 36 வயது பெண் ஹெனான் முகம்மது அப்துல் கரிம். இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அட்மிட் ஆனார். இவருக்கு சிசேரியன் செய்த டாக்டர், குழந்தையை வெளியே எடுத்துவிட்டு அவரது வயிற்றில் தையல் போடும்போது மறதியாக தனது செல்போனை அந்த பெண்ணின் வயிற்றின் உள்ளே வைத்துவிட்டார்.
குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற ஹெனானுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயிற்றில் இருந்து செல்போன் வைப்ரேட்டிங் ஆகும் சத்தமும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெனானின் தாயார் தனது மகளுடன் மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் சரியாக பதில் கூறாததால் உடனடியாக ஹெனான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றின் உள்ளே செல்போன் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீண்டும் ஹெனானுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த செல்போனை வெளியே எடுத்தனர்.
இந்த விவகாரம் ஜோர்டான் நாட்டு பத்திரிகைகளில் வெளிவந்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோர்டான் சுகாதார அமைச்சர், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.