பனிக்காலத்தில் பெரும்பாலும் சருமம் வறண்டிருக்கும். அதற்கு தகுந்தாற்போல் அளவாக முகத்திற்கு ஒப்பனை செய்து கொள்வது நல்லது. அலுவலகம், வேலை என்று வெளியே செல்லும் பெண்கள், ஒப்பனை செய்தது தெரியாமல், அளவான ஒப்பனை போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். முதலில் கன்சீலரை (Base) கொஞ்சம் ஒரே சீராக முகத்தில் பூசினால் நம் முக ஒப்பனை அதிக நேரத்திற்கு அப்படியே இருக்கும் கலையாது.
பின்னர் முகம் மற்றும் காது, கழுத்துப் பகுதியில் முகஅலங்கார தூரிகையினால் (Makeup brush) பவுடரை பூசவும். எந்த இடத்திலும் அதிகம் படாமல் முகம் முழுவதும் ஒரே மாதிரியாக பூச வேண்டும். பின்பு, ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தியாக வரைந்து அடுத்து, கண்களுக்கு மேலே புருவங்களுக்கு கீழே மூடும் பகுதியை ஐஷடோ பூசவும்.
இந்த ஐஷடோவின் நிறம் நீங்கள் உடுத்தும் உடைக்குப் பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும். பின், கண்களுக்கு மேலே, இமைகளுக்கு அருகில் ஐ லைனரால் கண் மை போல் மெல்லிய கோடு வரையவும். இதனால் கண்கள் எடுப்பாகத் தெரியும். அதற்கடுத்து, கண் இமைகளை மஸ்கரா மூலம் அழகு படுத்தினால், பார்ப்பதற்கு இமைகள் அடர்த்தியாகத் தெரியும்.
இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும். கன்னங்களை பளபளப்பாக மின்னவைக்க (Blusher) ப்ளஸரை முக அலங்கார தூரிகையினால் பூசவும். அப்படி செய்வதால் முகத்திற்கு தகுந்தாற்போல் கன்னங்கள் எடுப்பாக இருக்கும்.
உதட்டில் உதட்டுசாயம் போடுவதற்கு முன்பாக, லிப் லைனர் பென்சிலால் அழகிய லைன் வரைந்து கொண்டால் உதட்டு சாயத்தினை அழகாக வரையலாம். இதனால் உதட்டு சாயம் வெளியே வராது, வழியாது. இனி இந்த அழகிய சிம்பிளான மேக் அப் உடன் நீங்கள் வெளியே கிளம்பலாம்!