கையில் இருக்கும் கம்ப்யூட்டர் என்று சொல்லப்படும் ஸ்மார்ட் போன்கள் நேரத்தை மிச்சமாக்கும் சாதனங்கள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவை அலுவலகத்தில் பணியாற்றுபவர்களின் பணிச்சுமையை அதிகமாக்கி வருகிறது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
கனடாவைச் சேர்ந்த ஆக்னஸ் ரெய்டு இன்ஸ்டிடியூட் இந்த ஆய்வை நடத்தியது. இதில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட் போனால் தங்கள் பணிச்சுமை அதிகமாகி உள்ளதாகக் கூறியுள்ளனர். 9 சதவீதம் பேர் ஸ்மார்ட் போனால் தங்கள் பணி நேரம் குறைந் திருப்பதாகக் கூறியுள்ளனர்.
பாதிப்பை உணர்ந் தவர்களில் பலரும் அலுவலக நேரத்திற்குப் பிறகும் பணி சார்ந்த இமெயில்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன் தங்களை அடிமையாக்கிவிட்டது என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி 71 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்கள் ஒட்டுமொத்தமாக நல்லவிதமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்திருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதான் ஸ்மார்ட் போனின் செல்வாக்கு!