உலகவங்கி தலைவரை நியமனம் செய்தது அமெரிக்கா
உலக வங்கி தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக ஜிம் யோங் கிம்மை அமெரிக்கா மீண்டும் நியமனம் செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஜேக்கப் ஜே லியூ தெரிவித்துள்ளதாவது:
உலக வங்கித் தலைவர் பதவிக்கு ஜிம் யோங் கிம்மை மீண்டும் நியமனம் செய்வது பெருமை அளிப்பதாக உள்ளது.
சவாலான சூழ்நிலையிலும் சர்வதேச நாடுகளின் மேம்பாட்டிற்காக அறிவுப்பூர்வமான வழிமுறையில் தீர்வுகளைக் கண்டவர் ஜிம் யோங் கிம்.
குறிப்பாக, வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை பிரச்னைகளை திறம்படக் கையாண்டது, பருவநிலை மாறுபாடு விவகாரங்களில் அவர் ஆற்றிய பணிகள் சர்வதேச சமூகத்தால் மிகுந்த வரவேற்பை பெற்றன.
இவை தவிர, எபோலா வைரஸ் தொற்றுக்கு எதிரான போர் மற்றும் அகதிகள் சந்தித்து வந்த நெருக்கடிகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் உரிய தீர்வுகளை முன்னெடுத்துச் சென்றதில் அவரது சீரிய தலைமை பெரும் பங்கு வகித்தது.
உலக வங்கியின் தலைவராக இரண்டாவது முறையாக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து, உலக வங்கி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதுடன் முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என்றார் அவர்.
தென்கொரிய தலைநகர் சியோலில் கடந்த 1959-ஆம் ஆண்டு பிறந்த ஜிம் யோங் கிம், பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
ஹார்வர்டு பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலையில் உலக வங்கியின் 12-ஆவது தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.