கடைசி நிமிடத்தில் த்ரில் கோல்: எகிப்தை வீழ்த்தியது உருகுவே
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் உருகுவே அணி 89வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு எகிப்து அணியை வீழ்த்தியது.
நேற்றைய போட்டியில் இரு அணிகளும் பலம் வாய்ந்த அணி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இந்த நிலையில் 89வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய உருகுவே அணி வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை எகிப்து அணியின் 3 வீரர்கள் துள்ளிக்குதித்து தலையால் முட்டி தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயரமாக குதித்த உருகுவே வீரர் ஜோஸ் ஜிமென்ஸ் தலையால் அற்புதமாக முட்டி கண் இமைக்கும் நேரத்தில் பந்தை கோலுக்குள் திணித்து எகிப்து அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளித்தார்.
இந்த கடைசி நிமிட கோல் காரணமாக உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.