பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையினால பாரதிய ஜனதா கட்சிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் இன்று சமூக வளைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இந்தியாவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றிருப்பதற்கு அமெரிக்கா தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. புதிய அரசு அமைக்கப்பட்டவுடன், அதனுடன் நாங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதை முன்னெடுத்து செல்வோம்’’ என்று கூறியுள்ளது.
மேலும் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்று தொலைபேசி மூலம் மோடியை தொடர்பு கொண்டு பேசிய ராஜபக்சே,”உங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றிக்காக பாராட்டுகிறேன். இலங்கைக்கு நீங்கள் வந்து செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று தொலைபேசி மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.முன்னதாக மோடி பிரதமரானால் இந்தியாவின் அமைதி சீரழிந்துவிடும் என பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது நவாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து பரபரப்புடன் பேசப்படுகிறது.
இதேபோல் பிரிட்டன், சீனா, ரஷ்யா உள்பட உலகின் பலநாட்டு தலைவர்கள் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைத்து நாட்டு தலைவர்களும், மோடியின் அரசுடன் நட்பு கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.