கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள். 11வது இடத்தில் இந்தியா
இந்தியா ஏழை நாடு என்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் அதிகம் வாழும் நாடு என்றும், இந்தியாவை ஒருசிலர் கூறி வந்தாலும், கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவு தெரிவிக்கின்றது. இந்தியாவில் மொத்தம் 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும், உலக அளவில் இந்தியா 11வது கோடீஸ்வரநாடாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவதும், பொருளாதார சீர்திருத்ததில் நம்பிக்கையுள்ள பிரதமர் மோடியின் முயற்சியால் சேர்ந்துள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதும் பங்கு சந்தை உயர்வும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
கேப்ஜெமினி மற்றும் ஆர்.பி.சி. வெல்த் மேனேஜ்மெண்ட் வெளியிட்டுள்ள 2015ஆன் ஆண்டின் உலகச் செல்வ அறிக்கையின்படி இந்தியாவில் 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதன் மூலம் உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
மேலும், அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் சுமார் 43.51 லட்சம் கோடீஸ்வரர்களுடனும், இரண்டாவது இடத்தில் ஜப்பான் சுமார் 24.52 லட்சம் கோடீஸ்வரர்களுடனும், 3வது இடத்தில் ஜெர்மனி சுமார் 11.41 லட்சம் பேருடனும், 4வது இடத்தில் சீனா சுமார் 8.9 லட்சம் கோடீஸ்வரர்களுடனும் உள்ளது.