உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ரகுராம் ராஜன். ப.சிதம்பரம்
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி வரும் நிலையில் இதுகுறித்து அவர் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ரகுராம் ராஜனுக்கு காங்கிரஸின் முன்னனி தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனின் திறமையை உபயோகப்படுத்தும் அளவுக்கு இந்த அரசுக்கு தகுதி இருக்கின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ‘முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்ததாக தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் மாதத்துடன் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாஜக எம்.பி சுப்பிரமணியசாமியின் கருத்து குறித்து ப.சிதம்பரத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய பசிதம்பரம், “பிரதமரோ அல்லது நிதியமைச்சரோ இத்தகைய கருத்தை தெரிவித்தால் அது குறித்து தான் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ரகுராம் ராஜனை பணியில் அமர்த்தும் போது அவரை மிகவும் நம்பியதாகவும், தற்போதும் அவரது பணியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.