உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவில் நகரத்திற்குள் ரோப் கார் வசதி.
பெரிய மலைகள், நதிகள் ஆகியவற்றை கடக்க மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்ட ரோப் கார் வசதியை தற்போது போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தா நகரத்திற்குள் ரோப் காரை பயன்படுத்த மேற்குவங்க அரசு முடிவெடுத்துள்ளது.,
கொல்கத்தாவில் உள்ள சீல்டா என்ற பகுதியில் இருந்து பிபிடி பாக் வரையிலும், ஹவுராவிலிருந்து புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள நபன்னா வரையிலும் என 2 வழித்தடங்களில் ரோப் கார் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேற்குவங்க அரசும் கன்வேயர் அண்ட் ரோப்வே சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து, கன்வேயர் அண்ட் ரோப்வே சர்வீசஸ் நிறுவனத்தின் மேனேஜிக் டைரக்டர் சேகர் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுற்றுச்சூழல் சீர்கெடாமலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் புதுமையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் கனவு திட்டம். அந்த வகையில் உலகிலேயே முதன்முறையாக, கொல்கத்தாவில் ரோப் கார் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.
மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிர்ஹத் ஹகிம் ஆகியோருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இதுதொடர்பான திட்ட அறிக்கையை கட்டமைப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. அவை தயார் ஆனதும் டென்டர் கோரப்படும்.
இந்த ரோப் கார் சேவை மின்சாரத்தில் செயல்படும். ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியிலும் நிறுத்தங்கள் அமைக்கப்படும். மணிக்கு 12.5 கிமீ வேகத்தில் செல்லும் இந்தக் கார்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 2,000 பேர் பயணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அந்த நிறுவனத்தின் இயக்குநர் ரச்சனா முகர்ஜி கூறும்போது, “நெரிசல் மிகுந்த இடங்களான சீல்டா, கல்லூரி சாலை, பூங்கா சாலை ஆகிய இடங்களில் விரிவான ஆய்வு நடத்தி முழு திட்ட அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.