சுவிட்சர்லாந்து: 17 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட உலகின் மிக நீளமான சுரங்க ரயில்பாதை.
உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான சுரங்க ரயில் பாதை சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 17 ஆண்டுகள் கழித்து நிறைவு பெற்றுள்ளது. இந்த ரயில் பாதையை அந்நாட்டின் அதிபர் ஜோகன் ஸ்க்னீடர்-அம்மான் நேற்று திறந்து வைத்தார். இருப்பினும் இந்த பாதையில் வரும் டிசம்பர் மாதம் முதல் ரயில்சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் ஜூரிச் முதல் இத்தாலி நாட்டின் மிலன் நகரம் வரை இந்த சுரங்கப்பாதை செல்கிறது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதையில் தினமும் 260 சரக்கு ரயில்களும் 65 பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜப்பான் நாட்டில் 53.9 கிமீ நீளம் உள்ள செய்கன் ரயில் சுரங்கப்பாதைதான் உலகின் நீளமான ரயில் பாதை என்ற பெயர் பெற்றிருந்தது. தற்போது இந்த பெருமையை சுவிட்சர்லாந்து நாட்டின் 57 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை பெறுகிறது. இந்த திட்டத்திற்காக சுவிட்சர்லாந்து ரூ.80 ஆயிரத்து 400 கோடி செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.