நான்கே நான்கு அடிகள் மட்டுமே அகலமுள்ள உலகின் மிகக்குறுகிய வீடு ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பீட்டர் மெக்ரேட் என்பவருக்கு சொந்தமான இந்த வீடு வெறும் 47 இன்ச் மட்டுமே அகலம் கொண்டது. இந்த வீட்டிற்குள் படுக்கையறை, சமையலறை உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்த வீட்டின் ஜன்னலில் இருந்து கடற்கரையின் அழகை கண்டு ரசிக்கலாம் என்றும் வீட்டின் உரிமையாளர் பீட்டர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சகல வசதிகளும் நிறைந்த உலகின் மிகக்குறுகிய வீடு என்ற கின்னஸ் சாதனை இந்த வீட்டிற்கு கிடைத்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.82 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001ஆம் ஆண்டு தனது மனைவிக்காக இந்த வீட்டை வாங்கியதாகவும், இந்த வீட்டின் குறுகிய அகலம் காரணமாக தான் எந்தவித பர்னிச்சர்களையும் உபயோகிப்பதில்லை என்றும் பீட்டர் கூறியுள்ளார்.