அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.எஸ்.யாதவ் என்ற டாக்டர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘விமானப்படை, கடற்படை போல அல்லாமல் தரைப்படையில் ஜாதி, மதம், இடம் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.
ஜாட் ரெஜிமென்ட், கூர்க்கா ரெஜிமென்ட், மராத்தா ரெஜிமென்ட் என்று படைப்பிரிவுகளும் ஜாதி, மண்டல அடிப்படையில் உள்ளன. இந்த முறைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இது குறித்து விளக்கம் அளிக்க ராணுவத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை ஏற்று ராணுவம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘ஜாதி, மதம், நிறம், இடம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ராணுவத்தில் பணி நியமனம் செய்யப்படுவது இல்லை. சில படைப்பிரிவுகள் சமூக, கலாசார, மொழி, மண்டல அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் பொதுவான பயிற்சி மற்றும் நடவடிக்கைகளுக்காகவும் நிர்வாக வசதிக்காகவுமே அமைக்கப் பட்டுள்ளது. ராணுவ பணி இந்திய குடிமகள் எல்லாருக்கும் பொதுவானது. இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.