சரிவில் இருந்து மீள 15% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது யாஹூ நிறுவனம்
கூகுள் நிறுவனத்தை அடுத்து தேடுபொறி தளங்களில் முன்னணி இடத்தில் இருந்த யாஹூ நிறுவனம் தற்போது பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், சரிவில் இருந்து மீண்டு வர பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. யாஹூ நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக கடந்த 2012-ம் ஆண்டு மரிஸா மேடர் என்பவர் பதவியேற்ற பின்னரும் இந்நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டமுடியாமல் திணறி வருகிறது. யாஹூ நிறுவன பங்குகளை வாங்கிய பெரும்பாலானவர்கள் நஷ்டமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை யாஹூவின் பங்குகள் 1.2 சதவீதம் அளவுக்கு அதாவது, 29.14 டாலர்கள் அளவுக்கு வரலாற்றுச் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கையாக யாஹூ நிறுவனத்தின் சில பிரிவுகளை மூடிவிட்டு அவற்றில் பணியாற்றிவரும் 15 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்ப யாஹூ தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த முறையான அறிவிப்பு அந்நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிதிநிலை அறிக்கையுடன் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி, யாஹூவில் 12,500 முழுநேர பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களில் 1500 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போதைய முடிவின்படி 15 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவது என்றால் சுமார் 1650 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.