மகளை பார்த்து கண்கலங்கிய யாகூப் மேமன். சிறையில் நெகிழ்ச்சியான சந்திப்பு

மகளை பார்த்து கண்கலங்கிய யாகூப் மேமன். சிறையில் நெகிழ்ச்சியான சந்திப்பு

yakub memeonமும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் வரும் 30ஆம் தேதி தூக்குலிடப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் சிறையில் இருக்கும் அவரை அவரது மகள் சந்தித்து  கண்கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாகூப் மேமனின் குடும்பத்தினர், நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு நாக்பூர் சிறையில் இருக்கும் யாகூப் மேமனை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்தது. யாகூப் மேமனின் மனைவி ருஹீன் மேமன், ருஹீன் மேமனின் இரு சகோதரிகள், அவரது மகள் ஜுபேதா, மற்றொரு உறவினர் இக்பால் மேமன் ஆகியோர் சந்தித்தனர். பலத்த பாதுகாப்புடன் யாகூப் மேமன் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு அவரது குடும்பத்தினர் சென்றனர்.

தனது மகளைப் பார்த்ததும் யாகூப் மேமன் மனமுடைந்து  அழுததாகவும், அவரை, அவரது மனைவி தேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், அங்கிருந்து தனியார் வாகனம் மூலம் வெளியேறினர்.யாகூப் மேமனுக்கு வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்ட பின்னர், நாக்பூர் மத்திய சிறையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது குறித்து ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப மரண தண்டனை அறிவிக்கப்படுமா? 1992 டிசம்பரிலும், 93 ஜனவரியிலும் நடைபெற்ற மதக்கலவரங்களில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் எத்தனை பேர் தண்டனை பெற்றனர். கிருஷ்ணா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த பாஜக-சிவசேனா மற்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் போன்ற கூட்டணிகள் முடக்கி போட்டுவிட்டன

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யா, கர்னல் புரோஹித், சுவாமி அசீமானந்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தேசிய புலனாய்வு மையம் நீதிமன்றத்தில் இவர்களுக்கு வழக்கில் உள்ள தொடர்பை நிரூபிக்க வேண்டும். ராஜீவ் காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவில்லை.

குஜராத் கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் மேல்முறையீடு செய்ய சிறப்பு தனிப்படை விசாரணைக்கு நரேந்திர மோடி அரசு அனுமதிக்காது. சிறப்பு தனிப்படையும் தனது திட்டத்தைக் கைவிட்டு விட்டது.

இவ்வாறு ஓவைஸி தெரிவித்துள்ளார்.

Leave a Reply