மைசூரு தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான, ஜம்பு சவாரி, அமைச்சர்கள், மேயர்கள் வருகைக்காக காத்திருந்து, எமகண்ட நேரத்தில் துவக்கப்பட்டது. இதனால், அரசு குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
மைசூரு தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான, ஜம்பு சவாரி, அமைச்சர்கள், மேயர்கள் வருகைக்காக காத்திருந்து, எமகண்ட நேரத்தில் துவக்கப்பட்டது. இதனால், அரசு குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர். சாமுண்டீஸ்வரி தேவி, மகிஷாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில், உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, 405வது ஆண்டாக, 11 நாட்கள் கொண்டாடப்பட்டது. நிறைவு நாளான நேற்று, ஜம்பு சவாரி நடைபெற்றது.
ஜம்பு சவாரியை துவக்கி வைப்பதற்காக, மைசூரு வந்த முதல்வர் சித்தராமையா, தனுர் லக்னத்தில் நேற்று மதியம், 12:15 மணிக்கு, நந்தி த்வஜா கம்பத்துக்கு பூஜை செய்தார். மகர லக்னத்தில், பிற்பகல், 2:00 மணிக்கு ஜம்பு சவாரி துவங்குவதாக இருந்தது. ஆனால், அமைச்சர்கள், மேயர் உட்பட பலர் வருவதற்கு தாமதமானது. எமகண்டம் துவங்கிய பின், பிற்பகல், 3:07 மணிக்கு, அர்ஜுனா யானை சுமந்து வந்த தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு, முதல்வர் சித்தராமையா, அரச குடும்ப வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ஆகியோர் மலர் துாவி, ஜம்பு சவாரியை துவக்கி வைத்தனர். நேற்று, மாலை, 3:00 மணி முதல், 4:30 மணி வரை எமகண்டம். இந்த நேரத்தில்,தசரா ஜம்பு சவாரி துவங்கியது, பலரை முகம் சுளிக்க வைத்தது. அர்ஜுனாவின் இடது மற்றும் வலது புறங்களிலும், பின்னாலும் பலராமா, காவேரி, அபிமன்யூ, கோபி, விக்ரமா, கோபாலசாமி, ஹர்ஷா, பிரசாந்தா, துர்கா பரமேஸ்வரி, சைத்ரா ஆகிய, 11 யானைகள் அணிவகுத்து வந்தன.ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இடம் பெறும் என்று கருதப்பட்ட, கெஞ்சாம்பா கலந்து கொள்ளவில்லை. யானை பயிற்சியின்போது, மக்களை கண்டவுடன் பயந்து பின் வாங்கியதால், ஊர்வலத்தில் கலந்து கொள்ள அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊர்வலம் துவங்கியது முதல் பன்னி மண்டபம் வரை, ஒரே அமர்க்களமாக காணப்பட்டது. எளிமையான விழா என்பதால், வழக்கத்தை விட, 20 சதவீதம் கூட்டம் குறைவாக இருந்தது. எமகண்டத்தில் ஜம்பு சவாரி துவங்கியதற்கு, ராணி பிரமோதா தேவி அதிருப்தி தெரிவித்தார். இதே வேளையில், ஜம்பு சவாரியில் வந்த சில குதிரைகள், கூட்டத்தினரை பார்த்து மிரண்டன.
இதனால், அந்த குதிரைகள், வெளியேற்றப்பட்டன.
முதல்வரை தவிர்த்த ராணி: மைசூரு தசராவின் நிறைவு நாளை ஒட்டி, சுத்துார் மடத்தில் நேற்று வி.ஐ.பி.,க்களுக்கு, காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ராணி பிரமோதா தேவியும், யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரும் சுத்துார் மடத்துக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அப்போது, மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளை சந்தித்து ஆசி பெற, முதல்வர் சித்தராமையா வந்திருந்தார்.
இதை அறிந்த மகாராணியும், யதுவீரும் அவரை சந்திக்க விரும்பாமல், சிற்றுண்டி சாப்பிடுவதில் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது. முதல்வர் சென்ற பின், மடாதிபதியை யதுவீரும், ராணி பிரமோதா தேவியும் சந்தித்து ஆசி பெற்றனர். பல நாட்களுக்கு பின், முதல்வரும், ராணியும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், ராணி தவிர்த்து விட்டார். இதன் மூலம், முதல்வர் சித்தராமையாவுக்கு, அரச குடும்பத்தினரிடையே நல்லுறவு இல்லை என்பது தெரிந்தது.