24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய யாழ்தேவி ரயில் சேவை.

yarl deviஇலங்கையில் பல வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே நிறுத்தப்பட்டிருந்த ‘யாழ் தேவி’ ரெயில் சேவை நேற்று முதல்  மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியையும், சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்கு பகுதியையும் இணைக்கும் வகையில், யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே ரெயில் போக்குவரத்து கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை இயங்கி வந்தது.

‘யாழ்ப்பாணத்தின் அரசி’ என்று கூறப்படும் இந்த ரயிலில் முன்பகுதியில் தமிழில் ‘யாழ் தேவி’ என எழுதப்பட்டிருக்கும். இதனால்  இந்த ரெயிலுக்கு, தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில், இந்த ரெயில் போக்குவரத்து  திடீரென  நிறுத்தப்பட்டது. இதனால் யாழ்ப்பாண தமிழர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னர் மீண்டும் யாழ் தேவி ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு, நேற்று முதல் ரயில் சேவையை தொடங்கியது. நேற்று இந்த ரயிலின் தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று நடந்த தொடக்கவிழாவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ரெயிலை, இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் முறைப்படி டிக்கெட் வாங்கிக்கொண்டு, அந்த ரெயிலில் கடைசி 43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராஜபக்சே பயணம் செய்தார். திறப்பு விழாவில் பேசிய ராஜபக்சே ‘இது வெறும் ரெயில் சேவை மட்டுமல்ல, மாறாக வடக்குக்கும், தெற்குக்கும் இடையே ஒரு பாலமாகும்’ என்று கூறினார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யாழ் தேவி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாண தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ரெயில் சென்ற வழிகளில் எல்லாம் ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் கூடி நின்று ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply