‘யட்சன்’. திரைவிமர்சனம்
ஒரு நல்ல நாவலை திரைப்படமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை மிகத்திறமையாக கையாண்டிருந்தவர் சமீபத்தில் ‘தனி ஒருவன் படத்தை இயக்கிய ஜெயம் ராஜா. அதே நேரத்தில் ஒரு நல்ல நாவலை சொதப்புவது எப்படி என்பதை விஷ்ணுவர்தனிடம் அனைவரும் தாராளமாக கற்று கொள்ளலாம். சுபாவின் அதிரடியான ஆக்ஷன் நாவலை இந்த அளவுக்கு வேறு எந்த இயக்குனராலும் சொதப்ப முடியாது என்ற பெருமையை தட்டி செல்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
தூத்துக்குடியில் ரெளடித்தனம், அடிதடி செய்து பிழைப்பு நடத்தும் வெறித்தனமான அஜீத் ரசிகர் ஆர்யா. அஜீத் படத்திற்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டுக்களை கடன் கேட்க வந்த ஒருவர் கிழித்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா, அந்த நபரை அடிக்க, அவர் எதிர்பாராமல் இறந்துவிடுகிறார். இறந்தவர் அந்த ஊரின் மிகப்பெரிய ரெளடியான ஸ்டண்ட் சில்வாவின் ஆள் என்பதால், உயிருக்கு பயந்து சென்னைக்கு தப்பித்து செல்கிறார் ஆர்யா.
இதேபோல் பழனியில் தனது தந்தை நடத்தும் பஞ்சாமிர்தம் கடையை தொடர்ந்து நடத்த விருப்பமில்லாமல் சினிமா கனவுடன் இருக்கிறார் கிருஷ்ணா. சென்னை சென்று பெரிய ஹீரோவாக வேண்டும் என கனவு காணும் அவரை அவருடைய காதலி ஸ்வேதா ரெட்டி, தந்தைக்கு தெரியாமல் சென்னைக்கு பஸ் ஏற்றி வைக்கின்றார். ஆர்யா, கிருஷ்ணா இருவரும் ஒரேநாளி சென்னைக்கு வந்திறங்கி, ஒரே இடத்தில் தங்குகின்றனர்.
இந்நிலையில் ஒருவருடைய கையை பிடித்தாலே அவருக்கு பின்னால் நடக்கப் போவதை அறியும் நாயகி தீபா சந்நிதி, பெரிய மனிதர் போர்வையில் நடமாடும் வில்லன் கையை ஒருநாள் தற்செயலாக தொட்டு, அவருடைய உயிருக்கு ஆபத்து என்பதை அறிகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த வில்லன், தீபா சந்நிதி தன்னுடைய ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பார் என எண்ணி அவரை கொலை செய்யும் பொறுப்பை தம்பி ராமையாவிடம் ஒப்படைக்கின்றார். தம்பி ராமையா இந்த பொறுப்பை பண ஆசை காட்டி ஆர்யாவிடம் ஒப்படைக்கின்றார்.
இந்த நேரத்தில் பலவிதமான முயற்சிகள் செய்து ஒருவழியாக ஹீரோ சான்ஸை பிடிக்கின்றார் கிருஷ்ணா. ஜூன் 18ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம் என்று கிருஷ்ணாவிடம் சொல்லப்படுகிறது. அதே நாளில்தான் ஆர்யா, தீபாவை கொலை செய்ய நாள் குறிக்கின்றார்.
தம்பி ராமையா அனுப்பிய காரில் கிருஷ்ணாவும், சினிமா கம்பெனியில் இருந்து கிருஷ்ணாவை அழைக்க வந்த காரில் ஆர்யாவும் மாறி மாறி ஏறிவிடுகின்றனர். இதனால் கொலை செய்ய வேண்டிய இடத்திற்கு கிருஷ்ணாவும், சினிமா தொடக்கவிழாவிற்கு ஆர்யாவும் போய் சேருகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பங்கள், இருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் திருப்பங்கள்தான் மீதிக்கதை
ஆர்யாவுக்கு இந்த கேரக்டர் பழக்கமானது என்றாலும் இந்த படத்தில் அவருக்கு சீரியஸ் கேரக்டரா அல்லது காமெடி கேரக்டரா என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவருடைய ஜாலியான நடிப்பு இந்த படத்திலும் ரசிக்கும்படி உள்ளது. கிருஷ்ணாவுக்கு கிட்டத்தட்ட முழுநீள காமெடியன் ரோல். சினிமா ஆசையில் சென்னைக்கு வரும் அவர் செய்யும் சினிமா முயற்சிகளும், வில்லன் ஆட்களிடம் மாட்டிக்கொண்டி திண்டாடுவது என எல்லாமே சீரியஸ் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடிதான்.
தீபா சந்நிதியை சுற்றித்தான் மெயின் கதை என்றாலும், அவருக்குரிய வாய்ப்புகள் திரைக்கதையில் இல்லை. இவருடைய கேரக்டரை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருந்தால் படம் சுவாரஸிமாக இருந்திருக்கும். ஸ்வேதா ரெட்டியின் ரவுடி கலந்த ரொமான்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது.
தம்பி ராமையா வழக்கம்போல எரிச்சலூட்டும் காமெடியை தொடர்கிறார். இந்த பாணியை இவர் எப்பொழுதுதான் மாற்றிக்கொள்வாரோ? என தெரியவில்லை.
மனோபாலாவை ஒரு படத்தின் மெயின் வில்லனாக போட்டால் எந்த அளவுக்கு காமெடி செய்வாரோ, அதைவிட சற்று அதிகமாக இந்த படத்தின் மெயின் வில்லன் காமெடி செய்கிறார். அவருக்கு இணையாக காமெடி செய்யும் மற்றொரு வில்லன் பொன்வண்ணன்.
சுபாவின் படுவிறுவிறுப்பான சீரியஸ் நாவலை மிக அதிகளவில் காமெடி கலந்து படத்தை மொத்தமாக சொதப்பியுள்ளார் விஷ்ணுவர்தன். அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகள் பழைய ‘எம்.ஜி.அர், சிவாஜி படங்களை’ ஞாபகப்படுத்துகிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார்தான். பின்னணி இசை ஓகே என்றாலும் அழுத்தமான காட்சிகள் இல்லாததால் விழலுக்கு இறைத்த நீர். ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே ஓகே.
ஒரு ஆக்ஷன் கதையை ஒன்று சீரியஸாக எடுக்க வேண்டும், அல்லது முழுநீள காமெடியாக எடுக்கவேண்டும். இதுபோன்ற அரைகுறை முயற்சியை விஷ்ணுவர்தன் இனிமேல் எடுக்க மாட்டார் என நம்புவோம். ‘தல’யை மட்டும் திரையில் காட்டினால் ஒரு படத்தை வெற்றி படமாக்கிவிடலாம் என்று கனவு காணுவது தவறு என்பதை இந்த படத்தின் மூல விஷ்ணுவர்தன் புரிந்து கொள்வார். மொத்தத்தில் ‘யட்சன்’, சொதப்பல்களின் உச்சம்.