வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா? அதிகாரிகள் விளக்கம்
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவி வருவது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமறை விடப்பட்டுள்ளது. 31-ந்தேதி (சனிக்கிழமை) 5-வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும். வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
ஏப்ரல் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும். ஏப்ரல் 2-ந்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். அதனால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது.
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பது தவறான தகவலாகும். சனிக்கிழமை வங்கிகள் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.