கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! மெஜாரிட்டியை நிரூபிப்பாரா?
நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியும், பாஜகவும் ஆட்சி அமைக்க முயற்சித்தன.
இருதரப்பினர்களும் கவர்னரை சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் நேற்றிரவு பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆளுனரின் இந்த அழைப்பை அடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் எடியூரப்பாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரித்தால் மட்டுமே இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில் 15 நாட்களுக்குள் முதல்வர் எடியூரப்பா தனது ஆட்சியின் மெஜாரிட்டியை எப்படி நிரூபிப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது