விஜய் ஆண்டனியின் ‘எமன்’. திரைவிமர்சனம்
பிச்சைக்காரன், சைத்தான் ஆகிய வெற்றி படங்களுக்கு பின்னர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘எமன்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு தாத்தாவின் நிழலில் வளரும் விஜய் ஆண்டனி, தாத்தாவின் உயிரை காப்பாற்ற பணம் தேவை என்பதால் செய்யாத குற்றத்தை பணத்திற்காக ஒப்புக்கொள்கிறார். சிறையில் முன்னாள் எம்.எல்.ஏ தியாகராஜனின் நட்பு கிடைக்கின்றது. சிறைக்குள்ளே தியாகராஜனின் எதிரிகளும் இருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.
இந்நிலையில் தியாகராஜனுக்கு விசுவாசியாக மாறிய விஜய் ஆண்டனிக்கு அமைச்சர் ஒருவரின் மூலம் மிரட்டல் வருகிறது. அமைச்சரின் மிரட்டலை சமாளிக்க வேறு வழியில்லாமல் அரசியலில் நுழைகிறார் விஜய் ஆண்டனி. அரசியல் மூலம் தன்னையும் தனது தோழி மியா ஜார்ஜையும் அமைச்சரிடம் இருந்து காப்பாற்றி கொள்வதோடு, அமைச்சரின் பழிவாங்கும் படலத்தை எப்படி சமாளிக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை
விஜய் ஆண்டனி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அமைச்சருடனான தைரியமான வசனங்கள், அரசியல் கவிழ்ப்பு சதிகளை முறியடிப்பது, சூழ்ச்சிகளை சமாளிப்பது, அதிகாரப்போட்டியால் அதிர்ந்து போவது என விஜய் ஆண்டனி அனைத்து பக்கங்களில் இருந்தும் ஸ்கோர் செய்கிறார். செண்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே இன்னும் அவரது முகம் செட் ஆகவில்லை
மியா ஜார்ஜ் இந்த படத்தின் நாயகி. அவ்வளவுதான் இதைத்தவிர இவரிடம் நாம் வேறு எதையும் எதிர்பார்க்ககூடாது.
அரசியல் சதுரங்க விளையாட்டில் திரைமறைவு வேலை செய்யும் அரசியல்வாதியாக கச்சிதமாக நடித்துள்ளார் தியாகராஜன். இவரது எதிரியான அமைச்சர் கேரக்டரும் சூப்பர். மேலும் படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டர் சார்லி. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சார்லியின் நடிப்புத்திறமைக்கு ஒரு நல்ல கேரக்டர்.
‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கரின் திரைக்கதை கச்சிதம் என்றால் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். தமிழ் சினிமா என்றாலே தேவையில்லாமல் நாயகி, டூயட் பாடல், ரொமான்ஸ் ஆகியவை இருந்தே ஆகவேண்டும் என்ற பார்முலாவில் இருந்து வெளியே வந்திருக்கலாம். படத்தின் வேகத்தை காதல் காட்சிகள் குறைத்துள்ளது. அதைத்தவிர இயக்குனரிடம் குறை காண எதுவும் இல்லை. அடிக்கடி வரும் டுவிஸ்டுகள், திருப்பங்கள் குறிப்பாக கடைசி அரை மணி நேர விறுவிறுப்பு ஆகியவைக்காக ஜீவா சங்கருக்கு ஒரு சபாஷ்
விஜய் ஆண்டனியின் இசையில் ‘என் மேல கை வச்சா காலி’ என்ற பாடல் மட்டும் தேறுகிறது. பின்னணி இசை மிக அபாரம்.
மொத்தத்தில் ஹாட்ரிக் அடித்திருக்கின்றார் விஜய் ஆண்டனி.
‘எமன்’ விறுவிறுப்பான அரசியல் படம்