ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல்

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு வருகிற 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் பி.சரோஜா, திமுக வேட்பாளர் வெ.மாறன் மற்றும் சுயேச்சைகள் என 27 வேட்பாளர்கள் மொத்தம் 35 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

கடந்த 18 ஆம் தேதி நடந்த பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர் பி.சரோஜா, திமுக வேட்பாளர் வெ.மாறன் மற்றும் 10 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தகுதியற்ற 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று உழைப்பாளி மக்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பி.செல்வம் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரி டி.சபாபதி வெளியிட்டார். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

அதன்படி, ஏற்காடு தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு,

பி.சரோஜா (அதிமுக)
வெ.மாறன் (திமுக)
மு.பழனிசாமி (சுயேச்சை)
சி.மணிகண்டன் (சுயேச்சை)
கே.மதியழகன் (சுயேச்சை)
ஆ.ராஜாகண்ணு (சுயேச்சை)
அ.ராஜேந்திரன் (சுயேச்சை)
எஸ்.ஏ.பழனி (சுயேச்சை)
கே.பழனிவேல் (சுயேச்சை)
கே.பூபாலன் (சுயேச்சை)
இ.பொன்னுசாமி (சுயேச்சை)

அதிமுக வேட்பாளர் பி.சரோஜாவுக்கு இரட்டை இலை சின்னமும், திமுக வேட்பாளர் வெ.மாறனுக்கு உதயசூரியன் சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 85 சின்னங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

ஏற்காடு தொகுதியில் வேறு கட்சிகள் எதுவும் போட்டியிடாததால் ஆளும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டையும் இதுவரை அறிவிக்கவில்லை.

ஏற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 ஆகும். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர். பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர்.

இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. டிசம்பர் 4 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தொகுதியில் 13 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். அதேபோல் 13 வாகனங்களுடன் கூடிய நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று சோதனை செய்து வருகின்றனர். இதுவரை ரூ.1 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10 கிலோ தங்கமும் சிக்கியது. தங்கம் கொண்டு சென்றதற்கான ஆவணங்களை காண்பித்த உடன் திருப்பி வழங்கப்பட்டது.

தொகுதிக்கு வரும் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் குழுவினர் சென்று வீடியோ படம் எடுத்து கண்காணிக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வாக்காளர்கள் பணம் வாங்குவதும், அவர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் என்பதால் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

4 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்க இருப்பதால் 48 மணிநேரத்திற்கு முன்பாக அதாவது 2 ஆம் தேதிக்குள் பிரசாரத்துக்கு வந்துள்ள பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏற்காடு சட்டசபை தொகுதி மட்டுமல்லாது சேலம் மாவட்டத்தை விட்டே வெளியேற வேண்டும். சிறப்பு புகார்கள் பெறப்பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்காடு சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 290 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குச்சாவடிகளில் 1,500 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 200 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஊழியர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3 ஆம் தேதி நடைபெறும் பயிற்சியின் போது எந்த வாக்குச்சாவடியில் பணியாற்றுவது என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் வெப்-காமிராக்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் வாக்குச்சாவடிகளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற தகவலை செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது

Leave a Reply