நம் மக்கள் பலவிதமான உபத்திரவங்களிலும், கட்டு களிலும் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பிரச்சினைகள் மாற ஒரே வழி ஜெபமும் விசுவாசமும்தான்.
‘அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்’. 1.சாமு.26:24
இந்த வசனத்தின்படி தாவீதை எல்லா உபத்திரவங் களில் இருந்தும் விடுவித்த தேவன், பல விதமான போராட்டங்களில் சிக்கியிருக்கிற ஒவ்வொருவரையும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
‘மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக் கட்டுகள் என்னைச்சூழ்ந்து கொண்டது; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தது’. சங். 18:4,5
இந்நாட்களில் பலவிதமான கட்டுகள் ஒவ்வொரு வரையும் பிடித்துக் கொள்கிறதை நாம் அறிவோம் அல்லவா. தாவீது கூறும்போது, ‘மரணம் அது ஒரு கட்டு என்றும், பாதாளம் அது மற்றொரு கட்டு என்றும்’ கூறுகிறார்.
நீங்களும் நானும் சுகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம். ஆகவே உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வையுங்கள். அவரே பிசாசின் கிரியைகளை சிலுவையில் அழித்தவர். அவராலேயன்றி வேறு ஒருவராலும் விடுதலை இல்லை.
‘என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?’ சங்.56:8
எப்பொழுதெல்லாம் உபத்திரவம் உங்களை தாக்கு கிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய உள்ளம் உடைகிறது. குடிகார கணவனால் கண்ணீரோடு இருக்கிற பெண்கள், கீழ்ப்படியாத மனைவிகளால் சமாதானத்தை இழந்து கண்ணீர் வடிக்கும் சகோதரர்கள் மற்றும் கீழ்ப்படியாத பிள்ளைகளால் கண்ணீர் வடிக்கும் பெற்றோர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பலவிதமான நெருக்கடிகளினாலும் உபத்திரவங்களினாலும் கண்ணீரோடு இருக்கும் குடும்பங்கள் என கூறிக் கொண்டே போகலாம்.
ஏதோ ஒரு காரணத்தின் நிமித்தமாக நீங்கள் கண்ணீரோடு கூட இருப்பதுதான் உண்மை. ஒருவேளை வெளியரங்கமாய் நீங்கள் கண்ணீர் வடிக்காவிட்டாலும் உங்கள் அந்தரங்கத்தில் கண்ணீரோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறீர்களல்லவா?
வியாதியோ, வறுமையோ அல்லது கடன் பாரமோ உங்களை இவ்விதமாக கண்ணீரின் பாதையில் நடத்திக் கொண்டிருந்தால், உங்களை விடுவிக்கிற தெய்வம் இயேசு இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்கள் உபத்திரவங்களை மனிதனிடத்தில் சென்று கூறி கண்ணீர் விடுவதைவிட கர்த்தருடைய சமூகத்தில் வந்து அவருடைய பாதத்தில் கண்ணீர் சிந்துங்கள். நீங்கள் வடிக்கிற ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரையும் தேவன் கணக்கு வைத்து உங்களுக்கு அற்புதங்கள் செய்வார்.
எசேக்கியா என்ற ராஜா தன்னுடைய வியாதியின் கொடூரத்தினிமித்தம் தேவனை நோக்கி மிகவும் அழுதான். அப்பொழுது ஆண்டவர் அவருடைய கண்ணீரின் விண்ணப்பத்தைக் கேட்டார். ஆயுசு நாட்களை பெருகவும் செய்தார்.
‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்’. 2 இராஜா.20:5
தேவ சமூகத்தில் நீங்கள் வடிக்கிற ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் கட்டாயம் உங்களுக்கு அற்புதங்களைக் கொண்டு வரும். ஆகவே கர்த்தருக்குள் உங்களை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
‘சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி யானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீ ருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்’ வெளி.7:17.
‘இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்…’ நீதி.14:10.
இறுதியாக நம்மை உபத்திரவப்படுத்துகிற மற்றொரு ஆயுதம் கசப்பு ஆகும். கசப்பு என்பது வேருக்கு அடையாளமாக இருப்பதாக எபிரேயர் 12:15 கூறுகிறது.
வேர் மனிதனால் காணமுடியாது, வேர் கீழ்நோக்கி செல்லக் கூடியது, வேர் உறிஞ்சும் தன்மை வாய்ந்தது, வேர் கடினமான பூமியையும் பிளக்கக்கூடியது.
கசப்பான வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கிறது. வெளியே காணும்போது சந்தோஷமாயிருக்கிற அநேகருக்குள்ளே அவர்களின் உள்ளான மனிதனில் வெளியே கூறமுடியாத கசப்பும், கஷ்டமும் அவர்களை வாட்டிவதைக்கிறது. ஆரம்ப நாட்களில் அவைகள் அவர்களுக்கு பெரிதாக தெரியாது. கசப்பின் உச்சக்கட்டம் முடிவில்தான் விளங்கும்.
‘அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதனால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது’ யாத். 15:23.
இந்த சூழ்நிலையில் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்ட உடனே அது மதுரமான தண்ணீராயிற்று என யாத்.15:25–ல் கூறு கிறது.
மரம் சிலுவைக்கு அடையாளம். உங்கள் வாழ்க்கையை சஞ்சலப்படுத்தியிருக்கிற சகலவித கசப்புகளை மதுரமாக்கக் கூடிய சிலுவையை நோக்கி திரும்புங்கள். சிலுவையில் வெற்றி சிறந்த நம் இயேசு ராஜா உங்கள் சகல உபத்திரவங்களிலிருந்து விடுவித்து உங்களை சந்தோஷப்படுத்துவார்.