தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது.
யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ந் தேதி இது அறிமுகமானது ) இந்த செயலி 20 லட்சம் முறைக்கு மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்திலேயே இதற்கு ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி கிடைத்தது. இப்போது தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் இதற்கு நிதியை முதலீடாக அள்ளிக்கொடுக்க தயாராக இருக்கின்றனர்.
ஐயோ ! (யோவின் விளைவாக இப்படியும் ஒரு செயலி உருவாகி இருக்கிறது )., யோ புராணம் போதும். இந்த செயலி அப்படி என்ன தான் செய்கிறது ? என்று கேட்கிறீர்களா?
யோ , ஒரு ’யோ’வை அனுப்பி வைக்க உதவுகிறது, அவ்வளவு தான். ஆம், யோ -இந்த ஒரு வார்த்தை தான் இந்த மொத்த செயலியின் பயன்பாடு. இந்த செயலியை டவுண்லோடு செய்த பின், அதை பெறும் நண்பர் பெயரை தேர்வு செய்து விட்டு , ஒரு தட்டு தட்டினால் அவரது போனில் , ஒரு செய்தி தோன்றும். யோ எனும் சொல் தான் அந்த செய்தி. வேறு எதுவும் இருக்காது.வேறு எதையும் அனுப்பவும் முடியாது. ஒரு வாரத்தையை மட்டும் அனுப்பி வைக்க ஒரு செயலியா? அதுவும் , யோ எனும் வார்த்தை! கூடவே அந்த வார்த்தைக்கான ஒலிக்குறிப்பும் தோன்றும். இதென்ன கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று முதலில் நினைக்கலாம். அதனால் தான் இந்த செயலி முட்டாள்த்தனமானது எனும் அடைமொழியை பெற்றிருக்கிறது.
இனி இந்த முட்டாளத்தனத்தை மீறி இந்த செயலி எப்படி கவர்ந்தது என்று பார்க்கலாம்.
யோ செயலி வெறும் முட்டாள்த்தனமானது மட்டும் அல்ல என்பது தான் விஷயம். யோ மிகவும் எளிமையானது. இந்த செயலி மூலம் எல்லோருக்கும் யோ எனும் செய்தியை அனுப்பலாம். ஆனால் இந்த யோ, காலை வணக்கத்திற்கோ அல்லது நான் நலம் ,நீங்கள் நலமா ? என்று கேட்பதற்கான குறிப்பாகவோ அமையலாம். நண்பர் அல்லது அன்புக்குரியவர்களின் நினைவு வருகிறதா? ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அவர்களுக்கு ஒரு யோ போய் சேர்ந்துவிடும். அவர்களும் அதைப்பார்த்து புன்சிரிப்புடன் உங்கள் அன்பு அல்லது கவனத்தை நினைவில் கொள்வார்கள். அவ்வளவு தான். எதையும் டைப் செய்யும் தேவையும் இல்லை: எதையும் படிக்கும் தேவையும் இல்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளலாம். இது தான் யோவின் மகிமை.
இந்த எளிமை தான் யோவை , முதலில் அறிமுகம் செய்து கொள்ளும் போது இதென்ன முட்டாளத்தனமாக இருக்கிறது என சொல்ல வைக்கிறது. ஆனால் அதை பயன்படுத்திப்பார்த்தால், அதிக ஊடுருவல் இல்லாமல் ,கவனத்தை சிதறடிக்காமல் மிக மிக எளிதாக தொடர்பு கொள்வதற்கான வழியாக இருக்கிறதே என்று பாராட்ட வைக்கிறது.
உண்மையில், இந்த முட்டாளத்தனத்துக்காக தான் யோ செயலியை அதன் நிறுவனர் உருவாக்க செல்லியிருக்கிறார். அது ஒரு சுவாரஸ்யமான கதை.
இஸ்ரேலின் வளர் இளம் நிறுவனமான மோப்லி (Mobli ) நிறுவனரான மோஷே ஹோகேக் ( Moshe Hogeg) தனது சகாவான ஆர்பெல்லிடம் ஒரு கோரிக்கை வைத்தார். தனது மனைவி மற்றும் உதவியாளருடன் ஸ்மார்ட் போன் மூலம் தொடர்பு கொள்ள எளிதான வழி தேவை என்பது தான் அந்த கோரிக்கை. இமெயில் வழியே தொடர்பு கொள்வதற்கு நேரம் ஆவதாக அவை நினைத்தார். குறுஞ்செய்திகள் அனுப்பினால் கூட நேரம் வீணாவதாக கருதினார். எனவே எதையும் டைப் செய்யாமல் ஒரு ஒரே பட்டனை அழுத்தினால், ஒற்றை வார்த்தை குறிப்பை அனுப்பி வைக்க முடிந்தால் போதுமானது என நினைத்தார். அவர் மனதில் தோன்றிய வார்த்தை யோ. இந்த வார்த்தையை அனுப்பினால் அதை பெறுவருக்கு தாங்கள் நினைக்கப்படுகிறோம் அல்லது தேவைப்படுகிறோம் என்பது புரியும்.
இந்த யோசனையை அவர் ஆர்பெல்லிடம் சொன்ன போது அவர் கொஞ்சம் கடுப்பாகி விட்டார். இது மடத்தனமாக இருக்கிறது .இதை ஒருவரும் பயன்படுத்த மாட்டார்கள் என ஆர்பெல் கூறினார். ஹோகெக் அசரவில்லை, எனக்காக இந்த மடத்தனமான செயலியை உருவாக்கித்தாருங்கள் என அமைதியாக கேட்டுக்கொண்டார்.
ஆர்பெல் யோசித்தார். அதன் பிறகு செயலி உருவாக்கத்தில் ஈடுபட்டார். 8 மணி நேரத்தில் யோ செயலிக்கு செயல் வடிவம் கொடுத்துவிட்டார். அவர் உருவாக்கிய செயலி ஜோகெக் கேட்டதை விட எளிமையாக இருந்தது. அதில் எந்த ஐகானும் இல்லை.உள்ளே நுழைவதற்கான தேவையும் இல்லை. நண்பர்களை தேர்வு செய்து , முன் பதிவு செய்த செய்தியை அனுப்பும் வசதி மட்டுமே இருந்தது. இது தான் யோ பிறந்த கதை.
யோ பிரபலமானது இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான கதை.
ஏப்ரல் 1 ந் தேதி இந்த செயலி ஒசைப்படாமல் அறிமுகமானது. முதலில் இந்த செயலி ஆப்பிளிடம் சமர்பிக்கப்பட்ட போது, இதில் ஒன்றுமே இல்லை என ஆப்பிள் நிராகரித்து விட்டது. ஆனால் போராடி ஆப்பிளை சம்மதிக்க வைத்தனர். ( இப்போது அண்ட்ராய்டு, விண்டோஸ் போன் எல்லாவற்றிலும் செயல்படுகிறது) .
ஹோகெக் தன் மனைவியுடனும் சக ஊழியர்களுடனும் இந்த செயலியை பகிர்ந்து கொண்டனர். எல்லோருக்கும் இது பிடித்துப்போனது. அடுத்த மாதம் ஹோகேக் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றிருந்த போது தொழில்நுட்ப வலைப்பதிவாளரான ராப்ர்ட் ஸ்கோபலிடன் இந்த செயலியை காண்பித்து கருத்து கேட்டிருக்கிறார்.
“இது மிகவும் மடத்தனமான ஆனால் அதே நேரத்தில் பயன்படுத்த தூண்டும் செயலி ‘ என ஸ்காபல் சொல்லியிருக்கிறார். அதோடு தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த கருத்துடன் செயலி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்கோபல் சாதாரண நபர் இல்லை. தொழில்நுட்ப உலகில் செல்வாக்கு மிக்கவர். வலைப்பதிவிலும் பேஸ்புக்கிலும் அவர் சொல்லும் கருத்துக்கள் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகின்றன. ஸ்கோபல் பேஸ்புக் பக்கத்தின் மூலம் தொழில்நுட்ப உலகில் உள்ள பலரும் யோ செயலியை பயன்படுத்திப்பார்த்தனர். இதனிடையே பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த செயலி பற்றிய தகவலை பார்த்து விட்டு ஆர்பெலிடம் அது பற்றி மேலும் விவரம் கேட்டிருக்கிறார். செயலியை பற்றி விவரித்த ஆர்பெல் இந்த எளிமையான செயலிக்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி கிடைத்திருக்கிறது என்றும் கூறினார். இதனால் கவரப்பட்ட அந்த பத்திரிகையாளர் பிரலமான பைனான்சியல் டைம்ஸ் இதழில் இதை செய்தியாக்கினார். அவ்வளவு தான். யோ பிரபலமாகி விட்டது.
அதன் மடத்தனம் மற்றும் எளிமையால் கவரப்பட்டு பலரும் அதை பயன்படுத்திப்பார்க்க அனைவருக்குமே அதன் பயன்பாடு பிடித்துப்போனது. அப்புறம் என்ன, அதிகம் டவுண்லோடு ஆன செயலிகள் பட்டியலில் முன்னிலை பெற்று மேலும் பிரபலமானது. தொடர்ந்து பிரபலமாகி கொண்டிருக்கிறது.
இருங்கள் யோ வெற்றிக்கதை இன்னும் முடிந்துவிடவில்லை. ஹோகெக் மற்றும் ஆர்பெல் இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று சான்பிரான்சிஸ்கோவில் இருந்தபடி முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். யோ (http://www.justyo.co/ ) மிகவும் கவனிக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனமாக மாறிவிட்டது. பலரும் யோவின் திடீர் செல்வாக்கு பற்றி தான் ஆர்வமுடன் பேசி வருகின்றனர். இந்த வெற்றிக்கான காரணங்கள் அலசி ஆராயப்படுகின்றன. பலரும் யோவின் எளிமையை போற்றுகின்றனர். இன்னும் சிலரோ ,இதன் பின்னே இருப்பது மிகைத்தன்மை தான் என்று விமர்சித்துள்ளனர். இப்படி ஆர்ப்பாட்டம் செய்த பல செயலிகள் காணாமல் போயிருக்கின்றன என்கின்றனர்.
ஆனால், யோவை அதன் எளிமை மாறாமல் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கால்பந்து உலக கோப்பை, யோ எப்படி எல்லாம் பயன்படலாம் என்பதற்கான அருமையான உதாரணமாக அமைந்தது. உலக கோப்பையின் போது யோ அறிவிப்பு வசதி கோல்களை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு முறை கோல் அடிக்கும் போதும் யோ வரும். அல்லது யோ அறிவிப்பு வந்தால் கோல் என புரிந்து கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக , செய்தி தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளுடன் யோ இணைக்கப்படும் வசதி அளிக்கப்பட்டது. இனி , புதிய செய்தி அல்லது பதிவு வெளியாகும் போது வாசர்களுக்கு அது பற்றிய அறிவிப்பை யோவாக அனுப்பி வைக்கலாம். இப்படி பல புதுமையான விதங்களில் யோ பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் இஸ்ரேல் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை யோ செயலி மூலம் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதல் போன்ற அபாய அறிவிப்பு யோவாக தெரிவிக்கப்படும்.
சில, மாதங்களுக்கு முன் இணைய உலகை கலக்கிய பிலாப்பி பேர்ட் வெற்றியுடன் யோ வெற்றி ஒப்பிடப்படுகிறது. இரண்டு செயலிகளின் எளீமையே அவர் மிகவும் விரும்பட காரணம் என சொல்லப்படுகிறது. பிலாப்பி பேர்டு வெற்றிய அடுத்து அதே போன்ற பல விளையாட்டுகள் உருவாக்கப்பட்டது போலவே , யோ செயலியை போலவே பல நகல் செயலிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் நக்லெடுக்கும் முயற்சிகள் என்றாலும் ஒரு சில , யோவின் திடீர் செல்வாக்கை நையாண்டி செய்யும் வகையில் இருக்கின்றன. இந்த நையாண்டியை சிலர் நிஜ செயலிகள் என்று நினைத்தும் ஏமாந்துள்ளனர்.
நிற்க, யோ செயலி மற்றும் அதன் பின் உள்ள மிகத்தன்மையை நையாண்டி செய்யும் விதமாக நம்மூரிலும் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐய்யோ என்பது தான் அந்த செயலி. வாவ் லேப்ஸ் எனும் இந்திய நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. யோ செயலிக்கு முதலீடு கொட்டுவதையும் அதே நேரத்தில் நல்ல இந்திய நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது கடினமாக இருப்பதையும் சுட்டிக்காட்டும் வகையிலும் இந்த செயலியின் பக்கத்தில் ,ஐய்யோ எங்களுக்கும் மில்லியன் டாலர் நிதி தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி?
யோ செயலியின் இணையதளம்; http://www.justyo.co/
ஐய்யோ செயலி ; http://www.aiyoapp.com/?_ga=1.188781547.1355848129.1405764086
Thanks to vikatan.com