இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பழங்கால கலை தான் யோகா. உடற்பயிற்சிகளிலேயே மிகவும் சிறந்தது என்றும் சொல்லலாம். இது உள்ளத்தை மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். யோகாவின் மூலம் குணப்படுத்த முடியாத பிரச்சனைகளே இல்லை. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை யோகாவின் மூலம் காண முடியும்.
பொதுவாக உடலில் நோய்களின் தாக்குதல் அதிகம் இருப்பதற்கு, நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் காரணம். இந்த நோயெதிர்ப்பு சக்தியை யோகாவின் மூலம் வலிமைப்படுத்த முடியும். இங்கு நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க உதவும் யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றி, உடலை நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பாலாசனம்
நெஞ்சு சளி உள்ளவர்கள் பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், அவை குணமாவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமைப் பெறும். அதற்கு தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும்.
சேது பந்தாசனம்
இந்த ஆசனம் இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இது இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிக்கும். முக்கியமாக இது உடலின் ஆற்றலை அதிகரித்து, கிருமிகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அதிகரிக்கும். இதற்கு படத்தில் காட்டியவாறு தரையில் படுத்து, கால்களை மடக்கி, மூச்சை உள்ளிழுந்து இடுப்பை மேலே தூக்கி, பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டு ஆரம்ப நிலைக்கு வரவும். இப்படி 6-8 முறை தினமும் செய்து வர வேண்டும்.
பின்புறமாக வளையும் இந்த ஆசனம் செய்வதால், உடலின் வெள்ளையணுக்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும். படத்தில் காட்டியவாறு தரையில் நேராக படுத்து, இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டி உள்ளங்கைகளை தரையில் படுமாறு வைத்து, பின் மூச்சை உள்ளிழுத்து, இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும். பின் இரண்டு கைகளாலும் முதுகைப் பிடித்து, இரண்டு கால்களையும் தலைக்கு பின்னே கொண்டு சென்று தரையை தொட வேண்டும். இந்த ஆசனத்தால் மலச்சிக்கல், வாய்வு பிரச்சனை, தைராய்டு பிரச்சனை போன்றவற்றிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
புஜங்காசனம்
புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும். இதற்கு குப்புற படுத்து, இரண்டு உள்ளங்கைகளையும் மார்பின் அருகில் வைத்து, உடலை மேலே தூக்கி 20 வரை எண்ணவும். இதுப்போன்று மூன்று முறை செய்ய வேண்டும். இந்த ஆசனம் பெண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த ஆசனத்தால் முதுகுத்தண்டு வலிமைப் பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.
தனுராசனம்
இந்த ஆசனம் செய்யும் போது, செரிமான மண்டலத்தில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால், உடலில் இரத்த வெள்ளையணுக்களின் ஓட்டம் அதிகரிக்கும். இதற்கு தரையில் குப்புறப்படுத்து, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். பின் கைகளால் கணுக்கால்களைப் பிடித்து மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, தலையையும், உடலையும் வில் போன்று வருமாறு தூக்க வேண்டும். இந்நிலையில் சில நொடிகள் இருந்து, பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இப்படி 3-5 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மத்சயாசனம் (Matsyasana)
மத்சயாசனம் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, மார்பு பகுதியை விரிவடையச் செய்து, தைமஸ் சுரப்பியைத் தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் செல்களை உற்பத்தி செய்யத் தூண்டும். இதற்கு பத்மாசன நிலையிலோ அல்லது தரையில் படுத்தோ, கைகளை பிட்டத்திற்கு அடியில் ஒட்டியவாறு வைத்து, படத்தில் காட்டியவாறு உச்சந்தலை தரையைத் தொடுமாறு செய்ய வேண்டும். இந்நிலையால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி நீங்கும்