யோகா செய்வதற்கு பதிலாக நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுங்கள். நிதிஷ்குமார்

யோகா செய்வதற்கு பதிலாக நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுங்கள். நிதிஷ்குமார்

nitesh kumarசர்வதேச யோகாதினம் நாளை நாடு முழுவதும் கடைபிடிக்கப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி உள்பட பலர் அன்றைய தினம் யோகா பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறந்துவிட்டு யோகா பயிற்சி செய்வது பொருத்தமற்றது என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.

நேற்று பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், “யோகா என்பது இயற்கை மருத்துவ முறையாகும். மதுவுக்கு அடிமையானவர்களால் யோகா பயிற்சி செய்ய முடியாது. நாடு முழுவதும் மதுபான விற்பனையைத் தடை செய்யாமல் யோகா பயிற்சி செய்வது பொருத்தமற்றது. நானும் சிறுவயதில் இருந்தே யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.

சர்வதேச யோகா தினத்தை, பா.ஜ.க. தங்கள் கட்சியின் விவகாரத்தைப் போல சித்திரிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அதில் பிரதமர் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை. வர்த்தகம், தொழில் போன்றவற்றைவிட, மக்களின் நலனைக் காப்பது அவசியமாகும். அதனால்தான் பீகார் அரசுக்கு ரூ.5,000 கோடி வருமானம் அளித்து வந்த மதுபான விற்பனையை நாங்கள் தடை செய்தோம்.

பீகாரில் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம், என்று பா.ஜ.க. முதல்வர் ரகுவர் தாஸ் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் எழுதினேன். ஆனால், ஜார்க்கண்ட் அரசு அதைப் புறக்கணித்து, பீகாரை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மதுபான விற்பனையை அதிகரித்துள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply