தைராய்டு பாதிப்பை போக்கும் 7 யோகாசனங்கள்: வழிகாட்டுகிறது சித்த மருத்துவம்

1

சித்த மருந்துகளுடன் 7 வகையான யோகாசனங்களை முறைப்படி செய்து வந்தால் தைராய்டு பாதிப்பில் இருந்து பூரணமாக குணம் பெறலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை (இன்று) உலக யோகா தினமாக அறிவித்துள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாதம், வைத்தியம், யோகம் என்னும் மூன்று பெருந்தூண்களைக் கொண்ட சித்த மருத்துவ முறை யில், உடலையும், மனதையும் ஒருசேர செயல்படுத்தி நன்மை பெற வழிவகுப்பதே யோகம். மனதையும் உடலையும் ஒன் றிணைக்க உடலை வளைத்து ஒவ்வொரு நிலையிலும் நிறுத்து தலே யோகாசனம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

சித்த மருத்துவம் – யோகாசனம் பற்றி சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இயற்கை மருத்துவமனை வளாகத் தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலரும் தமிழ்நாடு சித்தா மருத்துவ அலுவலர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் எம்.பிச்சையா குமார் கூறியதாவது:

உலகில் எத்தனை வகை ஜீவராசிகள் உள்ளனவோ, அத் தனை வகை ஆசனங்கள் உள்ளன. அந்த ஜீவராசிகளின் பெயரா லேயே அவை அழைக்கப்படு கின்றன. நீரையும் உணவையும் இன்றியமையாத மருந்தாகக் கொண்டிருந்தான் மனிதன். இயற்கையில் இருந்து விலகிய தால், நோய்களால் பாதிக்கப்படத் தொடங்கினான். மதுமேகம் எனும் நீரிழிவு, அதிகுருதியழுத்தம் எனும் உயர் ரத்த அழுத்தம், வீதனக் கோளாறுகள் (தைராய்டு பிரச் சினை) என அதன் பட்டியல் நீள்கிறது. இந்த மாதிரியான நோய்களுக்கு மருந்துகள், ஆசனங்கள் வாயிலாக முற்றுப்புள்ளி வைக் கிறது சித்த மருத்துவம்.

கழுத்தின் முன் பகுதியில் வண்ணத்துப் பூச்சி வடிவில் உள்ள சுரப்பியே வீதனக் கோளங்கள் (தைராய்டு சுரப்பி). இவற்றில் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு மிக முக்கியமானது. இது இயல்பான அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் கேடுகள் விளையும். இதைத்தான் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கிறது சித்த மருத்துவம். தைராய்டு அதிகம் சுரப்பது அதி வீதனக் கோளாறு (ஹைப்பர் தைராய்டிஸம்), குறை வாக சுரப்பது குறை வீதனக் கோளாறு (ஹைபோ தைராய் டிஸம்) எனப்படுகின்றன.

உடலையும், மனதையும் பாதிக்கும் இந்த வீதனக் கோளாறு களில் இருந்து விடுபட சித்த மருத்துவம் சிறந்த மருந்துகளோடு 7 வகையான யோகாசனங்களை பரிந்துரைக்கிறது. அவை:

சர்வாங்காசனம் (தோள்பட்டை தாங்கி), உஷ்டிராசனம் (ஒட்டகம் போல் நிற்றல்), யோக முத்ராசனம் (பத்மாசனம்) இடது கால் வலது தொடை மீதும் வலது கால் இடது தொடை மீதும் பொருத்தி 2 முழங் கால்களும் தரையைத் தொடுமாறு அமர் தல்), அர்த்த (பாதி) மச்சாசனம், ஹலாசனம் (ஏர்போல இருத் தல்), புஜங்காசனம் (பாம்பு படமெடுப்பதைப்போல இருத்தல்), சிரசாசனம் (தலை தாங்கி – இது ஆசனங்களின் அரசன்). இந்த 7 ஆசனங்களையும் சித்த மருத்துவர்களின் பரிந்துரை யோடு, முறைப்படி கேட்டறிந்து செய்துவந்தால் வீதனக் கோளா றில் இருந்து பூரண குணம்பெற முடியும். அத்துடன், நரை, திரை நீக்கி ஆயுளுக்கும் இளமை யாக இருக்கலாம். உடலையும், மனதையும் கல்போல வைத்திருக்க உதவும் கற்பங்களுள் ஒன்று யோகம் என்கிறது சித்த மருத்துவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தைராய்டு காரணமாக ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள்

அதிகம் சுரப்பதால் பாதிப்பு

போதிய அளவு அல்லது அதிகம் சாப்பிட்டாலும் எடை குறைதல், அதிக இதயத் துடிப்பு, கழுத்தை சுற்றி வீக்கம், கழுத்து வலி, மூச்சு விடுவதில் சிரமம், தாங்கமுடியாத உடல்சூடு, அதிக வியர்வை, உடல் நடுக்கம், தோல் அரிப்பு, மயக்கம், எலும்பு பலம் குறைதல்.

குறைவாக சுரப்பதால் பாதிப்பு

குறைவாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலும் உடல் பருமனாவது, குறைவான இதயத்துடிப்பு, குளிர் தாங்க முடியாமல் தவிப்பது, சோர்வு, சோம்பல், வறண்ட சருமம் மற்றும் தலைமுடி, ஒழுங்கற்ற மாதவிடாய், மலச்சிக்கல், மன அழுத்தம், ரத்த சோகை.

Leave a Reply