சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்கள் 50 வயது வெளியேற்றப்படுவார்கள். உபி முதல்வர் அதிரடி
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் யோகி ஆதித்யநாத் தற்போது மேலும் ஒரு அதிரடியாக அரசு நிர்வாகத்தில் சரியாக பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் உபி அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உ.பி., புதிய தலைமைச்செயலாளர் ராஜிவ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இம்மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், சரிவர செயல்படாத அதிகாரிகள், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிக்கையும், தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுநலனை கருத்தில் கொண்டு சிலதுறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி., அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தற்போதே துணிச்சலுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.