கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சமர்பிக்கிறோம். பெயர், இ-மெயில் முகவரி, இருப்பிடம், செல்போன் எண் உள்ளிட்ட பல தகவல்கள் நம்மிடம் இருந்து கோரப்படலாம். இந்த விவரங்கள் நம்முடைய சேவைப் பக்கத்தில் மட்டும் அல்லாது பொதுவிலும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.
பொதுவில் என்றால், இணையத்தில் தேடப்படும்போது நம்முடைய பெயர் தொடர்பான விவரங்களில் இவையும் தோன்றுவதற்கான வாய்ப்பாகும்.
தனியுரிமை நோக்கில் இது அத்தனை பாதுகாப்பானது அல்ல. இந்நிலையில் கூகுள் அதன் பயனாளிகளுக்கு அவர்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் ‘அபவுட் மீ’ (https://aboutme.google.com/) பக்கத்தில் நுழைந்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் நுழைந்தால் கூகுள் சேவை மூலம் தெரிவிக்கப்பட்ட உங்களைப் பற்றிய தகவல்களில் எவை எல்லாம் பொதுவில் இருக்கின்றன என காண்பிக்கப்படுகிறது. அவற்றை நீங்கள் எடிட் செய்யலாம் அல்லது நீக்கலாம். இவை கூகுள் பிளஸ் விவரங்கள் தொடர்பானது என்றாலும் தனியிரிமை விழிப்புணர்வில் முதல் படியாகக் கருதலாம்.