ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.ஒருவரை பார்த்து கண் அடித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா நேற்று டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப் பாரம்பரிய மாளிகையை ஆய்வு செய்தார். அப்போது பார்வையாளர்களில் ஒருவராக இருந்த வாலிபர் ஒருவர் பெண் எம்.எல்.ஏவை பார்த்து கண் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த எம்.எல்.ஏ அந்த வாலிபரை, கன்னத்தில் பளாரென அறைந்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அல்கா லாம்பா கூறுகையில், ”அந்த வாலிபர் என்னை பார்த்து கண்ணை சிமிட்டினார். என்னை தவறான வழியில் பார்த்தார். அந்த வாலிபர், நகராட்சி மன்றம் அருகே எனக்கு மிகவும் நெருக்கமாக வந்தார். உடனடியாக நான் அவரை கனனத்தில் அறைந்துவிட்டேன். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அந்த வாலிபரை விசாரணை செய்தபோது அவர் மனநிலை சரியில்லாதவரை போல நடித்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு மனநல மருத்துவமனையில் பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த வாலிபர், பால்ஜீத் நகரை சேர்ந்த ராஜேஷ் என்று கூறி உள்ள போலீசார், எங்களுக்கு புகார் வந்துள்ளது, நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றனர்.