யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம். விடிய விடிய நடந்த விசாரணைகள்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரை காப்பாற்ற அவருடைய வழக்கறிஞர்கள் கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன்புகூட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் இன்று தூக்கிலிடப்பட்டார்.
கடைசி முயற்சியாக இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த மனுவை நிராகரித்ததை அடுத்து,கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
யாகூப் மேமன் இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் அவருடைய பிறந்த நாளே அவருக்கு இறந்த நாளாகவும் மாறியது. இன்று அதிகாலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார் என்று நாக்பூர் சிறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரதேசப் பரிசோதனைக்காக அவரது உடல் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
1993 மார்ச் 12ஆம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700 பேர் காயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்க் 2007 ஆண்டு ஜூலை 27-ம் தேதி தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் முதல் குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர்களுக்கு விமான மற்றும் ரயில் டிக்கெட்டுக்கள் எடுத்து கொடுத்ததோடு நிதி உதவியும் செய்தார் என யாகூப் மேமன் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்தது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.