ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைது.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ள யுவராஜை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சேலத்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்து வந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவும் திடீரென மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளி என தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்து பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், யுவராஜுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 12-ம் தேதி யுவராஜுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய நிபந்தனை ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், யுவராஜை கைது செய்து எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றார். இன்று யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.