இந்தியாவைத் தாக்குமா ஜிகா ஜுரம்?

 

jiga_2726505f

ஜிகா வைரஸ்… இன்று உலகெங்கும் பீதியுடன் உச்சரிக்கும் ஒரு பெயர். தென்னமெரிக்காவில் இதன் பாதிப்பு தெரிந்த சில நாட்களிலேயே, உலகை ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்த வைரஸ். அதுவும் உலகச் சுகாதார அமைப்பு சர்வதேச அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அளவுக்கு, ஜிகா வைரஸ் விஸ்வரூபமெடுத்துள்ளது. கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், கொசுவின் தாக்கம் அதிகமுள்ள நாடுகள் அலறுகின்றன. கொசுக்களின் ராஜ்ஜியம் நடக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஜிகா வைரஸின் பாதிப்பு எப்படி இருக்கும்? இதை எதிர்கொள்வது எப்படி?

புதிய சவால்

புதிய புதிய மருத்துவ வசதிகள் நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த மருத்துவ வசதிகளுக்குச் சவால் விடுக்கும் அளவுக்குப் புதிய புதிய நோய்களும் தொடர்ந்து உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றி காய்ச்சலுக்குக் காரணமாக இருந்த ஹெச்1என்1 வைரஸ், மெக்சிகோவில் உருவாகிப் உலக நாடுகளை அலற வைத்தது. கடந்த ஆண்டு எபோலா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் உருவாகி பெரும் பீதியைக் கிளப்பியது. இப்போது தென்னமெரிக்காவில் புயலாகக் கிளம்பியுள்ள ஜிகா வைரஸ் மருத்துவ உலகில் பீதியுடன் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசு வகையான ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசுதான் ஜிகா வைரஸுக்கும் காரணகர்த்தா. எனவேதான், கொசுக்கள் அதிகம் உள்ள நாடுகள், ஜிகா வைரஸின் பெயரைக் கேட்டு அலறுகின்றன. பிரேசிலில் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய், மத்திய அமெரிக்காவில் 23 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு இது பரவும் ஆபத்து இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் 40 லட்சம் பேரைத் தாக்கலாம் என்றும் உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்குப் போக வேண்டாம் என்றும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்கும்படியும் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய அறிகுறி

இப்படி அலற வைத்துள்ள ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அதை எப்படித் தெரிந்துகொள்வது? டெங்கு காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள் வெளிப்படுமோ, அதே அறிகுறிதான் ஜிகா வைரஸ் பாதிப்புக்கும் வெளிப்படும் என்கிறார் திருச்சி மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம். “ஜிகா வைரஸ் நோய் ஏற்பட்ட சில நாட்களில் அதற்கான அறிகுறிகள் முழுமையாகத் தெரியாது. டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளான காய்ச்சல், தோல் தடித்தல், கண்ணுக்குள் வலி, தசை மற்றும் மூட்டு வலி, தலை வலி, உடல் சோர்வு போன்றவை இருக்கும். கண் சிவப்பாக இருக்கும். இந்த அறிகுறிகள் இரண்டு முதல் ஏழு நாட்கள்வரை இருக்கும். பிரேசிலில் இந்நோய்க்கு ஆளானவர்கள் நரம்பியல் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பது நோயின் தீவிரத்தை உணர்த்துகிறது” என்கிறார் அலீம்.

ஜிகா வைரஸ் ஏற்படுத்தும் பின்விளைவுகளும் மிக மோசமாகவே இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் தாக்கினால் அது கருவிலிருக்கும் குழந்தைக்கும் பரவுகிறது. ஜிகா வைரஸ் தாக்கிய குழந்தை சிறிய தலையுடனேயே பிறக்கிறது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடுகிறது. இதனால் காலம் முழுக்க அந்தக் குழந்தை, அறிவுத்திறன் வளராமலே வாழ வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் அண்மையில் சிறிய தலையுடன் நிறைய குழந்தைகள் பிறந்திருப்பது சிக்கலை அதிகப்படுத்தியிருக்கிறது.

சிசுக்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக, பெண்கள் கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரேசிலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இந்த நிலை என்றால், ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் தாக்கம் அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வருமா?

இந்தியாவில் ஜிகாவின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். பொதுவாக இந்தியாவில் மழை மற்றும் குளிர்காலங்களில் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் தாக்கம் அதிகம். இந்தியாவிலிருந்து தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்குச் செல்வோர் அதிகம். அப்படி அங்கே செல்லும் ஒருவர், ஜிகா வைரஸோடு இந்தியாவுக்குள் வந்தால், அவரைக் கடிக்கும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் மற்றவர்களுக்கும் இங்கே எளிதாகப் பரவி விடும் ஆபத்து உள்ளது.

ஒரு புறம் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் மிரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்ற ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன. “இதே ஏடிஸ் கொசுக்கள்தான் ஆப்பிரிக்காவில் மஞ்சள் காய்ச்சலுக்குக் காரணமாகின்றன. ஆனால், அந்தக் காய்ச்சலின் பாதிப்பு இந்தியாவில் இல்லாததைப்போல, ஜிகா வைரஸ் காய்ச்சலின் பாதிப்பும் இங்கே இருக்காது” என்கிறார் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குநர் மவுரியா.

அடுத்த மாதம் கோடை காலம் தொடங்கி விடும் என்பதால் ஏடிஸ் கொசுக்களின் தாக்கம் இந்தியாவில் குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜிகா பீதியும் குறையலாம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை மிகவும் அவசியமல்லவா? ஜிகா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முன்னெச்சரிக்கையாக

“நம் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு கடிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். கொசு விரட்டியைப் பயன்படுத்த வேண்டும். கொசு கடியில் இருந்து தப்பிக்க உடலை முழுவதுமாக மறைக்கும் உடையை அணிய வேண்டும். உடை அடர் நிறத்தில் இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் கொசு கடிக்கு ஆளாகாமல் இருக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் டாக்டர் அலீம்.

கொசுவைக் கண்டால் தூர விலகுவோம்!

ஜிகா வைரஸ்: தற்காத்துக் கொள்வது எப்படி?

ஜிகா வைரஸுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ இன்னமும் கண்டுபிடிக்கப்படாததால் தற்காத்துக் கொள்வதே, அதிலிருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.

ஜிகா வைரஸ் இந்தியாவில் பரவியதாகச் செய்தியில்லை. அதேநேரம், ஜிகா வைரஸ் மட்டுமில்லாமல் பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்கள் கொசு கடிப்பதன் மூலமாகவே பரவுகின்றன. குறிப்பாக, ஏடிஸ் வகை கொசுக்கள். தாய் மூலம் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்பது இதில் கூடுதல் பிரச்சினை. கொசுக்கடி வழியாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்களுக்கு உள்ள தடுப்பு முறைகளையே இதற்கும் பின்பற்ற வேண்டும்.

என்ன வழிகள்?:

> ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், நாடுகளுக்குச் செல்லாமல் இருப்பது முதல் வழி.

> கருத்தரிக்க நினைக்கும் தாய்மார்கள் மருத்துவர்களிடம் முதலில் விவாதிக்க வேண் டும். கொசு கடியைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

> கை, கால்களை நன்றாக மூடும்படியான உடைகளையே மாலை நேரத்துக்கு மேல் அணிந்துகொள்ள வேண்டும்.

> கொசுவலையால் ஜன்னல்களையும், மாலையில் சூரியன் மறைவதையொட்டிக் கதவுகளையும் மூடி வைக்க வேண்டும்.

> கட்டிலுக்குக் கொசுவலை இருந்தால், அதையும் பயன்படுத்தலாம்.

> நொச்சி இலை, வேப்ப இலை கொத்துகளை வீட்டில் வைக்கலாம், அவற்றை எரித்துப் புகை போடலாம்.

> ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி ஒரு கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம்.

> கொசு கடிக்காமல் இருப்பதற்கான கிரீமைத் தடவிக்கொள்ள நினைத்தால், முதலில் சன்ஸ்கிரீன் லோஷனை தோலின் மேல் தடவிவிட்டு, பிறகு கொசுக்கடியைத் தடுக்கும் கிரீமைத் தடவிக்கொள்ளுங்கள்.

> குழந்தைகளுக்குக் கொசுக்கடியைத் தடுக்கும் கிரீமைத் தடவக் கூடாது. மாறாக, முழுமையாக உடலை மூடும்படியான ஆடைகளையும், குழந்தைக்கான கொசு வலையையும் பயன்படுத்துங்கள்.

> வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்கும் வகையில் எந்தப் பொருளையும் வைக்காதீர்கள். இதன் மூலமாகத்தான் கொசுக்கள் பெருகுகின்றன

 

Leave a Reply