இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம். பிரேசில் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம். பிரேசில் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

brazilபிரேசில் உட்பட 25 நாடுகளில் ஜிகா என்னும் கொடிய வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால் பெண்கள் இப்போதைக்கு கருத்தரிக்க வேண்டாம் என பிரேசில் நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸை அழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காததே இந்த எச்சரிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா வைரஸ் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் தற்போது குறைந்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்த ஜிகா என்ற புதிய வைரஸ் தோன்றியுள்ளது.

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் ஜிகா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. உடல் உறவு மூலமும் வைரஸ் தொற்றுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேசிலில் மட்டும் இதுவரை 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பிரேசில் மருத்துவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்னர். குறிப்பாக இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிப்புடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும் இதுவரை ஜிகா வைரஸ் தாக்கிய 4000 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜிகா வைரஸை அழிக்கும் வகையில் உடனடியாக மருந்து கண்டுபிடிக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க மருத்துவ நிபுணர்களை கேட்டுக் கொண்டுள்ளார். ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பு வரும் 1-ம் தேதி ஜெனீவாவில் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது

Leave a Reply